×

மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைதை கண்டித்து ஆந்திரா சட்டப்பேரவையில் தொடையை தட்டி மீசை முறுக்கி சவால் விட்ட நடிகர் பாலகிருஷ்ணா: கடும் அமளியால் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைதை கண்டித்து சட்டசபையில் தொடையை தட்டி, மீசை முறுக்கி நடிகர் பாலகிருஷ்ணன் சவால் விட்டார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு திறன் மேம்பாட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. அப்போது சட்டசபைக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் சந்திரபாபு மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரி பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் சபாநாயகர் இருக்கை அருகில் சென்று பேப்பர்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சபாநாயகர் மீது வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்ப்யூட்டர் மானிட்டரை இழுக்க முயன்றனர்.

இதனால் சபையில் பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது பிரபல நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் இந்துபுரம் எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா எழுந்து நின்று தொடையை தட்டி மீசையை முறுக்கியபடி ஆவேசமாக பேசினார். ஆதாரம் இன்றி சந்திரபாபுவை கைது செய்து இருக்கிறீர்கள். இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் சட்டசபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் எதிர் கோஷமிட்டனர். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது நீர்வளத்துறை அமைச்சர் அம்பாதி ராம்பாபு எழுந்து, ‘இதுபோன்ற செயல்களை சினிமாவில் நடிப்பதில் வைத்துக்கொள்ள வேண்டும். சட்டசபைக்குள் இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது’ என எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த நடிகர் பாலகிருஷ்ணா, ‘உனக்கு தில் இருந்தால் இந்த பக்கம் வா’ என ஆவேசமாக கத்தினார். தொடர்ந்து அவர்களுக்கிடைேய கடும் வாக்குவாதம் நடந்ததால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கூட்டத்தொடரை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் ஒத்திவைத்தார். பின்னர் கூட்டம் கூடிய பிறகும் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் முழக்கத்தில் ஈடுபட்டனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் 15 பேரை ஒரு நாள் பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தம்மினேனி சீதாராம் உத்தரவிட்டார். இதனை அடுத்து சட்டப்பேரவை காவலர்கள் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களை வெளியேற்றினர் இதற்கிடையே ஆதாரம் இல்லாத வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபுவை சிறையில் வைத்து கொல்ல முதல்வர் ஜெகன்மோகன் திட்டம் தீட்டி உள்ளார் என்று எக்ஸ் வலைதளத்தில் அவரது மகன் நாரா ேலாகேஷ் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைதை கண்டித்து ஆந்திரா சட்டப்பேரவையில் தொடையை தட்டி மீசை முறுக்கி சவால் விட்ட நடிகர் பாலகிருஷ்ணா: கடும் அமளியால் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Balakrishna ,chief minister ,Chandrababu Kai ,Andhra ,Desam ,Tirumala ,Balakrishnan ,Chandrababu Kaitha ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...